சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 5 ஆண்டு சிறை - திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-04-26 23:00 GMT
திருச்சி,

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் என்கிற முகமது இலியாஸ் (வயது 43). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு சைக்கிள் கடையில் வேலை செய்து வந்தார். முகமது இலியாசுக்கு திருமணமாகி மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

இந்தநிலையில் அவர், சைக்கிள் கடை உரிமையாளரின் 6 வயது பேத்தியை, ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அழைத்து சென்றார். பின்னர் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுபற்றி வெளியே சொன்னால் கை, கால்களை வெட்டி ஆற்றில் வீசி விடுவேன் என்று அந்த சிறுமியை மிரட்டினார்.

இதனால் பயந்து போன அந்த சிறுமி இதுபற்றி உடனடியாக தனது பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. பின்னர் 3 மாதங்கள் கழித்து தனது தந்தையிடம் நடந்த சம்பவம் பற்றி அவள் கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் முகமது இலியாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி ஜி.மகிழேந்தி முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 17 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியும் கோர்ட்டில் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தார். போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட முகமது இலியாசுக்கு பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ் (போக்சோ) 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைதண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 506(2) பிரிவின் கீழ் 2 ஆண்டு சிறைதண்டனையும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.மகிழேந்தி தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்