கும்பகோணத்தில் முகாம்: சிலை கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க பொன்.மாணிக்கவேல் தீவிரம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கும்பகோணத்தில் முகாமிட்டு சிலை கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க தீவிரம் காட்டி வருகிறார்.

Update: 2019-04-27 23:00 GMT
கும்பகோணம்,

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் இருந்து விலை மதிப்பில்லாத சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சென்னை ஐகோர்ட்டு நியமித்தது.

மேலும் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டன. இதன் காரணமாக பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணை மீண்டும் வேகமெடுக்க தொடங்கி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட்டு நியமித்து, மேலும் ஒரு ஆண்டு பணியாற்ற உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து சிறப்பு அதிகாரியாக பணியாற்றலாம் என உத்தரவிட்டது. பொன்.மாணிக்கவேலின் பதவி காலம் முடிவடைய இன்னும் 7 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் அவர் வழக்குகளை விரைந்து முடிக்க தீவிரம் காட்டி வருகிறார்.

இதையொட்டி அவர் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த சில நாட் களாக முகாமிட்டுள்ளார். 500-க்கும் மேற்பட்ட வழக்குகளை முடிக்க வேண்டி இருப்பதால், அந்த வழக்குகள் தொடர்பான சாட்சிகளின் விவரங்கள், தடயங்கள் உள்ளிட்டவை குறித்த கோப்புகளை ஆராய்ந்து, வழக்குகளுக்கு தேவையான ஆதாரங்களையும் திரட்ட பொன்.மாணிக்கவேல் தீவிரம் காட்டி வருவதாக போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்