நாகர்கோவிலில் அமைதி ஊர்வலம்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு நாகர்கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி மற்றும் அமைதி ஊர்வலம் நடந்தது.

Update: 2019-04-27 22:45 GMT
நாகர்கோவில்,

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த கொடூர சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோட்டார் மறை மாவட்டம் சார்பில் அமைதி ஊர்வலம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இதில் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, சுதந்திர போராட்ட தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா, பேராசிரியர் ஸ்ரீதரன், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மலர்வதி, அருள்அரசு மற்றும் பல்வேறு பங்குகளை சேர்ந்த அருட்பணியாளர்கள், கன்னியாஸ்திரிகள் பங்கேற்றனர்.

ஊர்வலமானது வேப்பமூடு சந்திப்பில் உள்ள அசிசி ஆலயம் முன் இருந்து தொடங்கியது. பின்னர் கோர்ட்டு ரோடு, டதி பெண்கள் பள்ளி சந்திப்பு வழியாக கலெக்டர் அலுவலகம் முன் சென்று முடிவடைந்தது. ஊர்வலமாக சென்றவர்கள் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அமைதியை வலியுறுத்தும் வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றார்கள். அதோடு துக்கத்தை அனுசரிக்கும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

இந்த அமைதி ஊர்வலம் முடிவடைந்ததும் கலெக்டர் அலுவலகம் முன் சாலை ஓரம் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் தங்களது கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக ஆயர் நசரேன்சூசை உள்பட பலர் அமைதியை வலியுறுத்தி பேசினார்கள். இந்த ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிளாரியுஸ் தலைமை தாங்கினார். கலா, லெனின், மரியசிங்காராயர் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 

மேலும் செய்திகள்