மழை, காற்றில் இருந்து தென்னை மரங்களை காக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் கலெக்டர் விளக்கம்

காற்று, மழையில் இருந்து தென்னை மரங்களை காக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

Update: 2019-04-28 22:45 GMT
திருவாரூர்,

தமிழக வட கடலோர மாவட்டங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து காற்று, கனமழையால் அதிக பாதிப்புக்குள்ளாகும் தென்னை மரங்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதன்படி தென்னை மரங்களை பொருத்தவரை மகசூல் தரும் தேங்காய், இளநீர், பச்சை ஓலை, காய்ந்த ஓலை போன்றவை அதிகம் இருந்தால் காற்றின் வேகத்தால், மரம் முழுவதும் அடியோடு சாய்வதற்கோ அல்லது முறிந்து விழுவதற்கோ வழி வகுக்கும்.

எனவே இளம் ஓலைகளை தவிர்த்து மீதமுள்ள பச்சை மற்றும் காய்ந்த மட்டைகள், இளநீர், தேங்காய் போன்றவற்றை வெட்டி அகற்றி விட வேண்டும். இதனால், மரம் காற்று வேகத்தை தாங்கி நிற்கும் வாய்ப்புகள் அதிகம். புயல், மழை போன்றவற்றை எதிர்கொள்ளவிருக்கும் 4 நாள்களுக்கு முன்பு விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும். இதனால் தென்னையின் வேர்ப்பகுதி மண்ணில் நன்றாக இறுகி மரம் சாய்ந்துவிடாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும். தற்போது விவசாயிகள் மேற்கொள்ளவிருக்கும் விதைப்பு பணிகளை காற்று மழை முடிந்த பின் மேற்கொள்ள வேண்டும்.

கண்காணிப்பு மையம்

மேலும் நெல், பயறு வகைகள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை சாகுபடி வயல்களில் தேங்கியிருக்கும் மழை நீரை வடிக்க உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் புயல் கண்காணிப்பு மையமானது, மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திலும், வட்டார அளவில் அனைத்து வட்டார அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டு வருகிற 5-ந்தேதி வரை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது. விவசாயிகள் ஏதேனும் விவரம் தேவைப்பட்டால் இந்த கண்காணிப்பு மையங்களை தொடர்்பு கொள்ளலாம்.

மேலும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் 04366-244956 மற்றும் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். வட்டார சாகுபடியில் உள்ள பருத்தி, எள், கோடை நெல், குறுவை நாற்றங்கால், குறுவை பயிர் குறித்த விவசாயி வாரியான பட்டியலை அனைத்து வேளாண்மை உதவி அலுவலர் சாகுபடி பதிவேட்டிலும் விடுதல் இன்றி பதிவு செய்ய உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதால், சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி அலுவலரை தொடர்பு கொண்டு சாகுபடி பரப்பை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்