ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட வி.வி.செந்தில்நாதன் வெற்றி பெறுவது உறுதி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட வி.வி.செந்தில்நாதன் வெற்றி பெறுவது உறுதி என அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

Update: 2019-04-28 23:00 GMT

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை தாங்கினார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா முன்னிலை வகித்தார். ஒன்றியச்செயலாளர் குருசாமி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் 2011–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மறைந்த ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்டு, அப்போது அரவக்குறிச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதில் துரோகிகளின் உள்ளடி வேலையால் குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தற்போது தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அரவக்குறிச்சி வேட்பாளராக வி.வி.செந்தில்நாதனை அறிவித்துள்ளார்கள். நாம் அனைவரும் எப்பாடுபட்டாவது அவரை வெற்றி பெறச்செய்வது உறுதி. அ.தி.மு.க.விலிருந்து மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளைப்பெற்ற துரோகி தற்போது தி.மு.க. சென்று உதயசூரியனுக்கு வாக்குகேட்கிறார். இது துரோகமல்லவா? இதை வி.செந்தில்பாலாஜி ஓட்டுக்கேட்க வரும்போது அதை பொதுமக்கள் கேட்கவேண்டும். மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இது துரோகிகளுக்கு சரியான பாடம் புகுட்டும் நேரம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். மக்கள் தீர்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து எங்களால் யூகிக்க முடியும். எங்களுக்கு தேவையான செய்திகளை தருவதற்கு புலனாய்வுத்துறை எங்கள் கையில் இருக்கிறது. வி.செந்தில்பாலாஜிக்கு அவருடைய கட்சியினர் மட்டும் தான் இருக்கிறார்கள் என்றார்.

கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்களாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.வி.கருப்பண்ணன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்