வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-29 22:15 GMT
வேதாரண்யம்,

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள், 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைக்கு அருகாமையில் நாகை மாவட்டம் கோடியக்கரை இருப்பதால் தீவிரவாதிகள் கடல்வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதி வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, பெரியகுத்தகை, கோடியக்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வேதாரண்யம் கடலோர போலீஸ் சூப்பிரண்டு கலித்தீர்த்தான், வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் கடலோர காவல் குழும போலீசார், வேதாரண்யம் சட்ட ஒழுங்கு போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் மத்திய உளவுத்துறை போலீசார் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில வேதாரண்யம் சன்னதி கடல் நாலுகால் மண்டப கடற்கரை பகுதியில் சந்தேகம்படும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை

கியூ பிராஞ்ச் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர். மற்றொருவர் பெங்களுருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் வேதாரண்யம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 2 பேரிடமும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்