‘பானி’ புயல் எதிரொலியாக நாகை மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

‘பானி’ புயல் எதிரொலியாக நாகை மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தங்களது பைபர் மற்றும் நாட்டு படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Update: 2019-04-29 23:00 GMT
நாகப்பட்டினம்,

கடந்த 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடைக்காலத்தில் பைபர் படகு மற்றும் நாட்டுப்படகுகள் குறைந்த தூரம் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு ‘பானி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் எச்சரிக்கை எதிரொலியாக நாகையில் தற்போது பைபர் படகு, நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களும் நேற்று 4-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது பைபர் படகு மற்றும் நாட்டுப்படகுகளை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் நாகை அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளம் மீன் வியாபாரிகள், பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

மேலும் செய்திகள்