திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.4 கோடியில் நவீன தீயணைப்பு வாகனம்

இங்கிலாந்து நாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.4 கோடி மதிப்பில் தீயணைப்பு வாகனம், இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-04-29 23:00 GMT
செம்பட்டு,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு விதமான வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் மின் செலவினங்களை குறைக்கும் வகையில், ஒரு மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக சோலார் தகடுகள் அமைக்கப்பட்டன. அவற்றின் மூலம் மின் உற்பத்தி, கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் தற்போது திருச்சி விமான நிலையத்திற்கு, புதிதாக தீயணைப்பு மற்றும் அவசரகால தேவைக்கான வாகனம் ரூ.4 கோடியே 10 லட்சம் செலவில் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் இங்கிலாந்தில் இருந்து மும்பைக்கு கப்பலில் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து லாரி மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது.

விரைவாக தீயை அணைக்கலாம்

இந்த வாகனமானது 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் மற்றும் தீயை அணைக்க பயன் படுத்தப்படும் பொடியை சேமித்து வைக்கும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தி விரைவாக தீயை அணைக்கலாம். மேலும் தீப்பற்றும் பகுதிகளில் தீ பரவாமல் மிக விரைவான முறையில் அணைப்பதற்கான உபகரணங்கள் இந்த வாகனத்தில் உள்ளன. விமான நிலையத்தில் ஏற்படும் அவசர காலங்களில் பயன்படுத்த ஏதுவாக இந்த வாகனம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்