எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: மாவட்டத்தில் 95.61 சதவீதம் பேர் தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.61 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2019-04-29 22:45 GMT
கரூர்,

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு முடிவு ஏப்ரல் மாதம் 29-ந்தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று காலை 9.30 மணியளவில் கல்வித்துறை இணையதளத்தில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவினை பார்ப்பதற்காக மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு காலை 8 மணியிலிருந்தே வரத் தொடங்கினர். பின்னர் தேர்வு முடிவு வெளியானதும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த தகவலை ஆர்வத்துடன் மாணவர்கள் பார்த்தனர். பெரும்பாலானோர் தேர்ச்சி அடைந்ததை அறிந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆரவாரம் செய்தனர். பின்னர் தங்களது தேர்வு முடிவு சந்திப்பின் நினைவாக மாணவ, மாணவிகள் செல்பி எடுத்து அதனை வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் பதிவிட்டதை காண முடிந்தது. இதையடுத்து தங்களது பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளை சந்தித்த அவர்கள், மேல்படிப்பில் எந்த வகையான பாடப்பிரிவினை எடுத்து படிப்பது? என்பன உள்ளிட்டவை பற்றி கேட்டு தெரிந்து கொண்டனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அந்த பள்ளியின் சார்பில் வாழ்த்து கூறி பாராட்டு தெரிவிக்கப்பட்டதை காண முடிந்தது.

வீட்டிலிருந்தபடியே மதிப்பெண்களை அறிந்தனர்

இதே போல் மாவட்ட மைய நூலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவியல் மையம் உள்ளிட்ட இடங்களில் இலவசமாக மாணவர்களின் மதிப்பெண் நகல் எடுத்து கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது உறுதிமொழி படிவத்தில் கொடுத்த செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு வந்ததால் வீட்டிலிருந்தபடியே அதனை தங்களது பெற்றோருடன் பார்த்து மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டனர். தேர்வு முடிவு வெளியானதும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முன்பு நீண்ட நேரமாகும். ஆனால் தற்போது முடிவு வெளியான உடனேயே அனைவரும் மதிப்பெண்களை செல்போன்களில் தெரிந்து கொண்டனர். இதனால் முன்புருந்த பரபரப்பு தற்போது குறைந்து மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக தேர்வு முடிவு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

95.61 சதவீதம் பேர் தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை 197 பள்ளிகளை சேர்ந்த 6,106 மாணவர்களும், 5,962 மாணவிகளும் என மொத்தம் 12,068 பேர் எழுதினர். இதில் 5,742 மாணவர்களும், 5,796 மாணவிகளும் என மொத்தம் 11,538 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.61 ஆகும். இது கடந்த ஆண்டை விட (95.98) 0.37 சதவீதம் குறைந்திருக்கிறது. மேலும் கடந்த 2017-ம் ஆண்டு மாநில அளவில் 15-வது இடத்தினை பிடித்திருந்த கரூர் மாவட்டம், 2018-ல் ஒரு இடம் முன்னேறி 14-வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு 19-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கும் விதமாக இருக்கிறது. எனினும் தேர்ச்சி சதவீதத்தை பார்க்கையில் ஆறுதல் தரும் விதமாகவே உள்ளது.

அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்

99 அரசு பள்ளிகளில் பயின்ற 5,804 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு தேர்வு எழுதினர். அதில் 5,390 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி தேர்ச்சி சதவீதம் 92.87 ஆகும். கடந்த ஆண்டு அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 94.23 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளில் கண்பார்வை குறைபாடுடைய 11 பேர் தேர்வெழுதி 11 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காது கேளாதோர், வாய் பேசாதோர் 12 பேர் தேர்வு எழுதியதில் 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதரவகை மாற்றுத்திறனாளிகள் 15 பேர் தேர்வு எழுதியதில் 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உடல் ஊனமுற்றோர் 35 பேர் தேர்வு எழுதி 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகள் குறித்து வரும் காலங்களில் கணக்கெடுத்து தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார். 

மேலும் செய்திகள்