நெல்லையில் முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உடலுக்கு கனிமொழி அஞ்சலி

நெல்லையில் முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உடலுக்கு, கனிமொழி எம்.பி. அஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-04-29 23:30 GMT
நெல்லை,

தி.மு.க. முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 27-ந்தேதி சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சென்னையில் இருந்து நேற்று ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய உடல், சொந்த ஊரான நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவருடைய சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு வசந்தி ஸ்டான்லி உடலுக்கு, கனிமொழி எம்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், “வசந்தி ஸ்டான்லி இறப்பு தி.மு.க.விற்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும். சிறந்த பேச்சாளர். நாடாளுமன்றத்தில் அவர் ஒரு பிரச்சினை குறித்து பேசினால் அது அனைவருக்கும் புரியும் வண்ணம் பேசுவார். கருணாநிதியின் அன்பை பெற்றவர்“ என்றார்.

மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல்வகாப், சிவபத்மநாதன், தி.மு.க. நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஞானதிரவியம், எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ். லட்சுமணன், கீதாஜீவன், முன்னாள் எம்.பி.க்கள் தங்கவேலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, மாலைராஜா, பகுதி செயலாளர் பூக்கடை அண்ணாத்துரை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், வைகோ தம்பி ரவிச்சந்திரன், விஜிலா சத்யானந்த் எம்.பி. உள்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் வசந்தி ஸ்டான்லி உடல், என்.ஜி.ஓ. காலனி கிறிஸ்தவ ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு நடந்த ஆராதனைக்கு பிறகு, பாளையங்கோட்டை குலவணிகர்புரம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்