குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-29 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ‘ஜிக்கா’ குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சில பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக 14-வது வார்டு டெலிபோன் காலனி, சோனைமுத்து தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

அந்த பகுதிகளில் 150-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் குடிநீர் கிடைக்காமல் ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தங்கள் பகுதி குடிநீர் பிரச்சினை குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த டெலிபோன் காலனி, சோனைமுத்து தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் ஒய்.எம்.ஆர்.பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ‘ஜிக்கா’ குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் தற்போது வரை எங்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்