லெனின் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் வியாபாரிகள் தாமாக முன்வந்து கூரைகளை கழற்றி எடுத்தனர்

புதுவை லெனின் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் வந்ததை தொடர்ந்து வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளின் கூரைகளை கழற்றி எடுத்தனர்.

Update: 2019-04-29 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை நகர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் அருண் தலைமையிலான மாவட்ட சாலை பாதுகாப்பு குழு முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை எதிரே இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அப்போது சுமார் 25 கடைகள் அகற்றப்பட்டன. அந்த கடைகளின் மேல் போடப்பட்டிருந்த கூரைகளை பொக்லைன் எந்திரங்கள் பெயர்த்து எறிந்தன. மேலும் தூண்களாக நிறுத்தப்பட்டிருந்த இரும்பு குழாய்கள் வளைத்தும், வெட்டியும் அகற்றப்பட்டன. மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அகற்றப்பட்ட பொருட்கள் இருந்தன.

இந்த நிலையில் நேற்று லெனின் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாக கடைக்காரர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற புதுச்சேரி நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் லெனின் வீதிக்கு வந்தனர்.

பாதுகாப்புக்காக போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், முருகவேலு தலைமையிலும் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்துள்ளதை கண்ட கடைக்காரர்கள் அவசர அவசரமாக தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடங்கினார்கள். அதிகாரிகள் ஆக்கிரமிப்பினை அகற்றினால் கூரைகளை பெயர்த்து எடுத்து, எதற்கும் உதவாமல் செய்துவிடுவார்கள் என்பதால் உஷாரான கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கூரைகள், இரும்பு கம்பிகளை தாங்களவே கழற்றி அகற்றினார்கள். அதேபோல் பெயர் பலகைகளையும் பெயர்த்து எடுத்துச்சென்றனர். அகற்றப்படாமல் இருந்த ஒரு சில கடைகளின் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் லெனின் வீதி போக்குவரத்துக்கு பாதிப்பு இன்றி விசாலமாக காட்சியளித்தது.

மேலும் செய்திகள்