வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த விவகாரம்: அ.தி.மு.க. வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

திருப்பூரில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த விவகா ரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-04-29 23:03 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி 33-வது வார்டுக்கு உட்பட்ட மண்ணரை, பாரப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க. மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து அவர்கள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் 33-வது வார்டு மண்ணரை, பாரப்பாளையம் பாரதிதாசன் நகரை சேர்ந்த கருப்புசாமி அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற கிளை செயலாளராக உள்ளார். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு பணமும், மதுவும் கொடுத்துள்ளார். அவருடன் மேலும் சிலர் சேர்ந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளனர். அரசு அலுவலர்கள் கொடுக்க வேண்டிய பூத் சிலிப்பையும் இவர்கள் கையில் வைத்து வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளனர்.

கடந்த 18-ந் தேதி வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்ததை பார்த்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. கருப்புசாமி போட்டுச்சென்ற ஆவணங்கள், பூத் சிலிப்புகளையும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மணி, ரத்தினசாமி ஆகியோர் கைப்பற்றி வைத்திருந்தனர்.

இந்தநிலையில் கருப்புசாமி தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னை ரத்தினசாமி, மணி உள்ளிட்ட 9 பேர் தாக்கியதாக கூறி திருப்பூர் வடக்கு போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே கருப்புசாமி கொடுத்த பொய் புகாரை நிராகரித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும். கருப்புசாமி மற்றும் அவருடன் செயல்பட்ட 5 பேர் மீதும், வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பூத் சிலிப் வழங்காத அரசு அதிகாரிகள் மீதும், உரிய விசாரணை நடத்தாத போலீசார் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்