தஞ்சை பெரியகோவிலில் பறந்த ஹெலிகேமராவால் பரபரப்பு படம் பிடித்த நபர் யார்? போலீஸ் விசாரணை

தஞ்சை பெரியகோவிலில் ஹெலிகேமரா பறந்ததால் பரபரப்பு நிலவியது. இதன் மூலம் படம் பிடித்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-01 22:15 GMT
தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரியகோவிலை கட்டினான். உலக பாரம்பரிய சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவில் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வந்து கோவிலின் கட்டிடக்கலை, சிற்பக்கலையை கண்டு வியந்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்றுஇரவு 7.30 மணி அளவில் அம்மன் சன்னதிக்கு மேல் ஹெலிகேமரா பரந்தது. அந்த கேமராவை யார், எங்கிருந்து இயக்கினார் என்பது தெரியவில்லை. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அம்மன் சன்னதிக்கு மேல் பரந்து படம் பிடித்து கொண்டிருந்த ஹெலிகேமரா திடீரென மாயமாகிவிட்டது.

இதனால் பரபரப்பு நிலவியது. ஹெலிகேமராவை ரிமோட் மூலம் இயக்கி படம் பிடித்தது யார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை பெரியகோவிலில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் இந்த கேமராக்கள் பல மாதங்களாகவே செயல்படாமல் உள்ளது. இந்தநிலையில் திடீரென யாரோ ஹெலிகேமரா மூலம் பெரியகோவிலை படம் பிடித்துள்ளனர். இதனால் கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, கோவிலுக்குள் யாரும் ஹெலிகேமரா மூலம் படம் பிடிக்கவில்லை. கோவிலுக்கு வெளியே பறந்து கொண்டிருந்ததை தான் கோவிலுக்குள் என்று சிலர் தவறாக சொல்லிவிட்டதாக கூறினர். தொல்லியல்துறை அதிகாரியிடம் கேட்டபோது, எந்த அனுமதியும் பெறாமல் இதுபோன்று ஹெலிகேமரா மூலம் பலர் பெரியகோவிலை படம் பிடிக்கின்றனர். அவர்களிடம் கேட்டால் நாங்கள் போலீசாரிடம் தெரிவித்துவிட்டோம் என்கிறார்கள். உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை கோவில் முழுவதையும் படம்பிடிக்க வேண்டும் என்றால் உரிய அனுமதி பெறவேண்டும் என்றார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக காட்சி அளிக்கும் பெரியகோவிலை பாதுகாப்பது நமது கடமையாகும். எனவே பெரியகோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகோவில் கட்டிடங்களை பேணி காக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்