கும்பகோணம் பாலிடெக்னிக் மாணவர் படுகொலையில் 3 பேர் கைது போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

கும்பகோணத்தில், பாலிடெக்னிக் மாணவர் படுகொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2019-05-02 23:15 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பத்துகட்டு தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் தனது வீட்டின் முன்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் அருண்(வயது 22). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் தந்தைக்கு உதவியாக மளிகை கடையிலும் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த அருணை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் குற்றுயிரும், குலைஉயிருமாக கிடந்த அருணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படுகொலை குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் கும்பகோணம் ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த செந்தில்(52), கும்பகோணம் மூர்த்தி ரோட்டை சேர்ந்த வெங்கடேசன்(45), சோழபுரத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஜீவா(23) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலிடெக்னிக் மாணவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள் குறித்து போலீசார் கூறிய தாவது:-

சிவசுப்பிரமணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டினார். இதே நேரத்தில் தனது மளிகை கடையை விரிவுபடுத்தும் பணியிலும் ஈடுபட்டார். இதற்காக அவர் ஒரு அரசியல் கட்சி பிரமுகரின் சகோதரர் உள்பட பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் சிவசுப்பிரமணியனிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சிவசுப்பிரமணியன் கடந்த மாதம்(ஏப்ரல்) 26-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அரசியல் கட்சி பிரமுகரின் சகோதரர் மற்றும் சிலர், சிவசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து கடனை திருப்பி கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அப்போது அருண், தகாத வார்த்தைகளை பேசியவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இந்த நிலையில் தான் அருண் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே கொலை தொடர்பான காட்சிகள் மளிகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டும் தங்களது விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்