கரூர் அரசு கலைக்கல்லூரி உதவி மையத்தில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்

கரூர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

Update: 2019-05-02 22:30 GMT
கரூர்,

என்ஜினீயரிங் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் நேற்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக உதவி மையங்களை அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரியாதவர்களுக்காகவும், ஆன்-லைன் வசதியை பெற முடியாதவர்களுக்காகவும் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கரூரில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறை ஆய்வகத்தில், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கணினிகள் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைய வழியில் சமர்ப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின் தடை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் வசதியும் உள்ளது. இந்த உதவி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைன் சேவையை பயன்படுத்த எந்தவித கட்டணமும் கிடையாது.

அந்த வகையில் நேற்று காலை முதலே மாணவ, மாணவிகள் இந்த மையத்துக்கு ஆர்வத்துடன் வந்து என்ஜினீயரிங் விண்ணப்ப படிவத்தை ஆன்-லைனில் பூர்த்தி செய்து விண்ணப்பித் தனர். இதனை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். விண்ணப்பம் பூர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்து, சேலம் அரசு தொழில்நுட்பக்கல்லூரி எந்திரவியல் துறை பேராசிரியர் பாலுசாமி, கணினி அறிவியல் துறை தலைவர் தங்கதுரை ஆகியோர் விளக்கி கூறினர்.

பின்னர் பெயர், முகவரி, பிளஸ்-2 மதிப்பெண் உள்ளிட்டவை பற்றிய விவரங்களை இணையவழி விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். என்ஜினீயரிங் விண்ணப்ப பதிவுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.250 கட்டணமாகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கப்படுவதால் படிவத்திற்கான கட்டணத்தை பணமாக உதவி மையத்தில் செலுத்த முடியாது. இதனால் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, இணையதள வங்கி சேவை மூலம் செலுத்தினர். என்ஜினீயரிங் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே மாதம் 31-ந்தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்