குடிநீர் கேட்டு அரியலூர் நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்

குடிநீர் கேட்டு அரியலூர் நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-05-03 22:45 GMT
அரியலூர், 

அரியலூர் நகராட்சி 2-வது வார்டு முனியப்பர் தெரு பெண்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் அரியலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. அவ்வாறு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும் அரை மணி நேரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.

வினியோகிக்கப்பட்டு வரும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீரும் கலங்கலாக வருவதாக அதனை குடிப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை. மேலும் அந்த நீரை உணவு சமைக்க பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் நாங்கள் தண்ணீரை கடையில் விலைகொடுத்து வாங்கி குடித்து வருகிறோம். குடிநீர் தட்டுப்பாட்டால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு தடையின்றி சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது, அரியலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தடையின்றி சுத்தமாக குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பெண்கள் ஊரில் உள்ள ஏரி குளங்களை தூர் வாரி நீரை சேகரிப்பதன் மூலம் மனிதர்களின் அன்றாட தேவைகளான குளிப்பது, துணி துவைப்பது போன்ற தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளலாம். எனவே வறண்டு கிடக்கும் ஏரி குளங்களை மாவட்ட நிர்வாகம் போர் கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என தெரிவித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது பெண் ஒருவர் தான் பாட்டிலில் கொண்டு வந்த கலங்கலான குடிநீரை நிருபர்களிடம் காண்பித்தார்.

மேலும் செய்திகள்