செயற்கை முறையில் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

சீர்காழியில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையின்பேரில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-04 23:00 GMT
சீர்காழி,

சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.

அதன்பேரில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு, மணிக்கூண்டு, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் குடோன்களில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனைக்கு உள்ளதா? என்று நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

300 கிலோ மாம்பழங்கள்

அப்போது அதிகாரிகள், அங்கு எத்தனால் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்