அணைக்கட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

அணைக்கட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-05 22:15 GMT

அணைக்கட்டு,

அணைக்கட்டு ஒன்றியம் ஒதியத்தூர் ஊராட்சியில் ஒரு சமுதாயத்தினரை சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பயன்படுத்த 10–க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரில் அதிகளவு உவர்ப்பு தன்மை உள்ளதால் சமைக்க மற்றும் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதே பகுதியில் வேறு சமுதாயத்தினருக்கு சுவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே எங்களுக்கும் அதே போல் குடிநீர் வழங்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நல்ல குடிநீர் எடுத்துவர 10–க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள குழாய் அடிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் வசிப்பவர்கள் இங்கு யாரும் தண்ணீர் எடுக்கவரக்கூடாது என்று கூறி தண்ணீர் பிடிக்கவிடாமல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காலிக்குடங்களுடன் ஒடுகத்தூர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், அதிகாரிகள் வரும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து அணைக்கட்டு தாசில்தார் (பொறுப்பு) குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்