பல்லாரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ரெயில் தாமதத்தால் 600 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத முடியவில்லை மீண்டும் வாய்ப்பு கோரி பிரதமருக்கு, குமாரசாமி கோரிக்கை

பல்லாரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ரெயில் தாமதத்தால் 600 மாணவ-மாணவிகள் கர்நாடகத்தில் நேற்று ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் திரும்பினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கோரி பிரதமருக்கு குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-05-05 23:30 GMT
பெங்களூரு,

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகள் படிக்க விரும்புபவர்கள் தேசிய தகுதி நுழைவு தேர்வு (நீட்) எழுதுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 2019-20-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். கர்நாடகத்தில் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த மாணவர்களின் வசதிக்காக கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, தார்வார், பெலகாவி, தாவணகெரே, மங்களூரு, உடுப்பி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பெங்களூருவில் எலகங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2 நாட்களுக்கு முன்பு அந்த தேர்வு மையம், ஓசூர் ரோட்டில் உள்ள தயானந்த்சாகர் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. இதுபற்றி தகவல் தெரியாத மாணவர்கள், எலகங்காவில் உள்ள கல்லூரிக்கு வந்தனர். அங்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், அங்கிருந்து வாடகை கார் மூலம் அவசர அவசரமாக சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தயானந்த்சாகர் கல்லூரிக்கு சென்றனர். ஆனால் அங்கு சில மாணவர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிப்பு பலகையில் இடம் பெற்று இருந்தது. அவர்களை மட்டுமே அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனா்.

மற்ற மாணவர்களின் பெயர்கள் பெயர் பலகையில் இல்லை. இதனால் அவர்கள் அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் மதியம் 12-30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை, ஆதார் கார்டு, மற்றொரு அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1-30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. மாணவிகள் செயின், மூக்குத்தி, கம்மல், ஜடை கிளிப், ரப்பர் பேண்ட் போன்றவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. சில மாணவிகள் கம்மல், ஜடை கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவற்றை அணிந்து வந்து இருந்தனர். அவர்கள் அவற்றை பெண் போலீசாரிடம் கழற்றி கொடுத்தனர்.

மாணவிகள் தனி அறையில் வைத்து சோதனை செய்யப்பட்டனர். முஸ்லிம் மாணவிகள் தங்களது பர்தாவை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

மாணவர்கள் டீ-சர்ட், பெல்ட், கைக்கெடிகாரம், செயின், மோதிரம், பிரேஸ்லெட் அணிந்து வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தேர்வையொட்டி விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் குறித்து மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.

இதற்கிடையே சிக்கமகளூரு மாவட்டம் கடூர் அருகே சிக்னல் கிடைக்காததால் பல்லாரியில் இருந்து பெங்களூருவுக்கு வந்து கொண்டிருந்த ஹம்பி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரெயிலில் பெங்களூருவுக்கு வந்து ‘நீட்’ தேர்வு எழுத இருந்த 600 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 600 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுத தயாராகி வந்தனர். அவர்களுக்கு பெங்களூருவில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் பல்லாரியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் ஹம்பி ரெயிலில் புறப்பட ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வந்தனர். வழக்கமாக இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த ரெயிலில் தாமதமாக நேற்று அதிகாலை 2 மணி அளவில் தான் அங்கிருந்து புறப்பட்டது. இருப்பினும் அந்த ரெயிலில் மாணவ-மாணவிகள் ஏறி பயணித்தனர்.

அந்த ரெயில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது சிக்னல் கிடைக்காமல் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் ஆகியும் அந்த ரெயிலுக்கு சிக்னல் கொடுக்கப்படவில்லை.

இதனால் அந்த ரெயிலில், பெங்களூரு தேர்வு மையத்தில் ‘நீட்’ எழுத வந்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் எப்படியாவது மதியம் 1 மணிக்குள் பெங்களூருவில் உள்ள நீட் தேர்வு மையத்திற்குள் சென்றுவிடலாம் என்று கருதி அதே ரெயிலில் பயணித்து வந்தனர். ஆனால் அந்த ரெயில் அங்கிருந்து மிகவும் மெதுவாகத்தான் வந்துள்ளது.

அவர்கள் மதியம் ஒரு மணியளவில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே ரெயில் நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதனால் நீட் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள், ரெயிலில் இருந்து இறங்கினர்.

பின்னர் அவர்கள் ரெயிலை சிறைபிடித்து என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் பெங்களூருவுக்கு வந்து குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு எழுத முடியாததால் கதறி அழுதனர். அவர்களை அவர்களுடன் வந்த பெற்றோரும், குடும்பத்தினரும் சமாதானப்படுத்தினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து பஸ்கள், கார்கள் மூலம் அவசர, அவசரமாக பெங்களூருவுக்கு வந்தனர். இருப்பினும் அவர்களால் குறித்த நேரத்திற்குள் வந்து சேர முடியவில்லை. இதன்காரணமாக அவர்களால் ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள் தேம்பி,தேம்பி கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பின்னர் அவர்கள் பெங்களூருவில் இருந்து தங்களுடைய ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் தேர்வு எழுத முடியாத சில மாணவ-மாணவிகள் தங்களுடைய நிலை குறித்து, மத்திய ரெயில்வே மந்திரிக்கு டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுத நடவடிக்கை எடுத்து உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் 600 பேர் நீட் தேர்வு எழுத முடியாமல் திரும்பிய சம்பவத்துக்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

வட கர்நாடகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெங்களூருவில் நடந்த நீட் தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர். ஹம்பி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாக வந்தது தான் இதற்கு காரணம். மேலும் தேர்வு மையம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட தகவல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு சரியாக தெரிவிக்கப்படவில்லை.

இதனால் பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர். இது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் பிரதமர், ரெயில்வே மந்திரி ஆகியோர் தலையிட வேண்டும். தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்