பொன்னேரியில் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு

பொன்னேரியில் நிலமோசடியை தடுக்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-06 22:30 GMT
பொன்னேரி,

பொன்னேரி வழியாக செல்லும் ஆரணி ஆற்றங்கரையோரத்தில் 265 ஏக்கர் பரப்பளவில் குன்னமஞ்சேரி, பெரியகாவனம் கிராமங்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு உருவானது. இங்குள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வழங்கப்பட்டன. மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நரிக்குறவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தனியார் சிலர் இந்த நிலத்தை மோசடி செய்து அபகரிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இதற்கு இங்கு குடியிருக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அத்துமீறி எங்கள் பகுதிக்கு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொன்னேரி போலீஸ், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு கடந்த நவம்பர் மாதம் புகார் செய்தனர்.

இதுபோல 16 முறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்தும், நிலமோசடியை தடுக்கக்கோரியும் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைப்பது என பொதுமக்கள் முடிவு செய்தனர்.

நேற்று 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஒன்று திரண்டு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். பின்னர் அனைவரும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், தாசில்தார் புகழேந்தி, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரவுக்குள் எதிர்தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் 4 மணி நேரம் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்