மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

Update: 2019-05-06 22:30 GMT
விழுப்புரம், 

திண்டிவனம் ரெயில்வே மேம்பால கீழ் பகுதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்துபோராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அப்போது கலெக்டர் சுப்பிரமணியனிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நாங்கள் திண்டிவனத்தில் 35 ஆண்டுகளாக நகராட்சிக்கு வாடகை செலுத்தி கடைகளை நடத்தி வருகிறோம். எங்களுக்கென்று தனியாக இடம் இல்லாததால் புதிய பஸ் நிலையம் கட்டும்போது மாற்று இடம் வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அதுவரை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறும், ஆக்கிரமிப்பு செய்யாமலும் வியாபாரம் செய்ய ஏதுவாக அனுமதி அளித்ததன்பேரில் திண்டிவனம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அமர்ந்து வியாபாரம் செய்து அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறோம் என்று கூறி அடிக்கடி எங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். எனவே நாங்கள் நிரந்தரமாக வியாபாரம் செய்ய ஏதுவாக மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து வியாபாரிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்