ஆலங்குடி சுல்தான் நகரில், ஆழ்குழாய் கிணறு அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஆலங்குடி சுல்தான் நகரில் ஆயிரம் அடியில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-07 23:00 GMT
ஆலங்குடி,

ஆலங்குடி 1-வது வார்டு சுல்தான் நகரில் பேரூராட்சியால் கட்டப்பட்ட பொது கழிவறை உள்ளது. இந்த கழிவறை ஓரமாக ஆயிரம் அடி ஆழத்தில் குடிநீருக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. இதையடுத்து ஒப்பந்தம் செய்தவர் நேற்று ஆழ்குழாய் கிணறு அமைக்க வாகனத்துடன் வந்து வேலையை தொடங்கினார். அப்போது கழிவறை அருகே அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறால் கிடைக்கப் பெறும்தண்ணீர் குடிக்க லாயக்கற்றது என்றும், ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சுற்றுப் புறத்தில் உள்ள வீடுகளில் 350 அடிக்கும் குறைவாக அமைக் கப்பட்டுள்ள ஆழ் குழாய் கிணறுகள் வறண்டு விடும். எனவே ஆழ்குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுல்தான் நகரில் கும்மங்குளம் விளக்கு சாலையில், ஆலங்குடி-ஆதனக் கோட்டை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் ஆயிரம் அடி ஆழத்தில் பொது கழிவறை அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் உங்களது கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்