ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டக்கூடாது - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுவையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டக்கூடாது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2019-05-07 22:15 GMT

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் நாராயணசாமி ஐகோர்ட்டு தீர்ப்பின்படி ஆட்சி செய்யவேண்டியதை செய்யாமல் அதிகாரிகளை மிரட்டி பணிய வைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கவர்னர் கிரண்பெடி தனது உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகளின் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவேன், ஓய்வுகால நிதியுதவிகள் கிடைக்காமல் செய்வேன் என்று மிரட்டினார்.

அரசு மற்றும் அமைச்சரவையின் முடிவினை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளை மிரட்டி பணிய வைக்க நினைப்பது முதல்–அமைச்சருக்கு அழகல்ல. முதல்–அமைச்சர் நாராயணசாமி தனது ஆட்சியை தக்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புதுவையில் ஆட்சி மாற்றம் வரும் என்று நாங்கள் கூறினால் ஜெயிலில் பிடித்து போடுவோம் என்று கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினையை மையப்படுத்தி ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்கிறார். அவருக்கு நாவடக்கம் வேண்டும்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் தேர்தல் முடிவுக்குப்பின் கட்சியில் இருப்பார்களா? இல்லையா? என்ற சந்தேகம் உள்ளது. தமிழக அரசு கவிழ்ந்துவிடும் என்ற முதல்–அமைச்சர் நாராயணசாமியின் பகல் கனவு பலிக்காது. புதுவை சட்டசபைக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செய்யப்பட்டபோது, அது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்தபோது சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை என்று முதல்–அமைச்சர் கூறினார். தற்போது தமிழக சபாநாயகர் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததை வரவேற்கிறார்.

நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிமாற்றி பேசுவதை முதல்–அமைச்சர் நாராயணசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த 3 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இனியாவது மத்திய அரசுடனும், பக்கத்து மாநில அரசுகளுடனும் சுமூக உறவு வைத்துக்கொள்ளவேண்டும்.

புதுவையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டக்கூடாது. நேரு வீதியில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விளம்பர பலகைகளும் நீட்டி வைக்கப்பட்டுள்ளது. பல தெருக்களில் அனுமதியின்றி ஆட்டோ ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் அரசு இடத்தை ஆக்கிரமித்து கடைகட்டி, குடிநீர், மின் இணைப்பும் பெற்றுள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே சாலைகளில் வாகனங்களை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்துள்ளனர். அதன் மீது அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

திறந்தவெளி விளம்பரம் செய்ய தடை செய்யப்பட்ட நிலையில் பல இடங்களில் அத்தகைய விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விளம்பர நிறுவனம் நடத்துபவர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தையே சுற்றி உள்ளனர். தற்போது பிரதான சாலைகளை அழகுபடுத்தும் விதமாக சாலையோரம் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டுவிட்டு அந்த கற்கள் பதிக்கப்படுகிறது. இதிலும் முறைகேடு நடக்கிறது. பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்