சேலத்தில், ஒரேநாள் இரவில் 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு - மேலும் 4 கடைகளில் திருட முயற்சி

சேலத்தில் ஒரேநாள் இரவில் 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். மேலும் 4 கடைகளில் திருட முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-05-07 22:45 GMT
சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலம் அருகே தர்மன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 54). இவர் ஜாகீர் அம்மாபாளையம் மெயின் ரோடு தர்மன் நகர் 4-வது கிராசில் குளிர்பான கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.

இதேபோன்று அதே பகுதியில் சேலம் மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த வெங்கிடபதியின் பர்னிச்சர் கடையின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றனர்.

பின்னர் அதே பகுதியில் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த கணேசன் (32) என்பவரது சலூன் கடை, சூரமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த கண்ணன் என்பவரின் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை, தர்மன் நகரை சேர்ந்த துரைசாமியின் டீக்கடை, சங்கர் என்பவரின் செல்போன் கடை என மொத்தம் 4 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கடைகளில் பணமோ, பொருட்களோ இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.

நேற்று காலை அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் 6 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கடைகளின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் உரிமையாளர்கள் கடைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கடைகளுக்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி, வெங்கிடபதி ஆகிய 2 பேரின் கடைகளில் மொத்தம் ரூ.20 ஆயிரம் திருட்டு போனது உறுதி செய்யப்பட்டது. மற்ற 4 கடைகளில் திருட முயற்சி நடந்து இருப்பது தெரியவந்தது.

பின்னர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு அடிக்கடி திருட்டு நடந்தது. அப்போது எங்களின் கோரிக்கையை ஏற்று இரவு நேரங்களில் போலீசாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் திருட்டு குறைந்தது. தற்போது திருட்டு சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. எனவே இரவு நேரங்களில் போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, திருட்டை தடுக்க வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்