வேலூர் மாவட்ட மாணவ- மாணவிகள் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.29 சதவீத தேர்ச்சி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது

பிளஸ்-1 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்ட மாணவ- மாணவிகள் 89.29 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Update: 2019-05-08 17:20 GMT
வேலூர், 

தமிழ்நாட்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 356 பள்ளிகளை சேர்ந்த 18,052 மாணவர்கள், 21,831 மாணவிகள் என மொத்தம் 39,883 பேர் தேர்வு எழுதியிருந்தனர். விடைத்தாள்கள் திருத்தப்பட்டு நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் 15,548 மாணவர்கள், 20,063 மாணவிகள் என மொத்தம் 35,611 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.29 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்ட மாணவ- மாணவிகள் 84.59 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டு 4.7 சதவீதம் தேர்ச்சி அதிகரித்திருந்தாலும் வேலூர் மாவட்டம் மாநில அளவில் கடைசி இடத்தையே பிடித்துள்ளது. ஏற்கனவே வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு ஆகியவற்றிலும் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் தாவரவியல், விலங்கியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் 90 சதவீதத்துக்கு குறைவாகவே மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள பாடங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்