திண்டிவனத்தில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை

திண்டிவனத்தில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-08 23:00 GMT
திண்டிவனம்,

திண்டிவனம் நகரில் உள்ள பட்டாசு கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட நாட்டு வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் திண்டிவனம் தாசில்தார் ரகோத்தமன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் திண்டிவனம் நகரில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நேரு வீதியில் கந்தன், மணி, குபேரன் ஆகியோருக்கு சொந்தமான 3 கடைகளில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து நாட்டு வெடி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து திண்டிவனம்-கர்ணாவூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் பாதுகாப்பாக வைத்தனர்.

இதுகுறித்து தாசில்தார் ரகோத்தமன் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த பட்டாசு கடை உரிமையாளர்கள் கந்தன், மணி, குபேரன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்