பெண்களிடம் சங்கிலி பறித்த எல்லை பாதுகாப்புபடை அதிகாரி கைது

பட்டாபிராம் பகுதியில் பெண்களிடம் சங்கிலி பறித்த எல்லை பாதுகாப்புபடை அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து நகை-மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-05-08 22:30 GMT
ஆவடி,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இதையடுத்து அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில், பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி மேம்பாலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். பின்னர், அவரை பட்டாபிராம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சென்னை அண்ணாநகர் மேற்கு, சாந்தம் காலனியை சேர்ந்த ஜார்ஜ் என்ற செல்வராஜ் (வயது 57) என்பதும், இவர் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிதும் தெரியவந்தது. கடந்த 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதும் தெரியவந்தது.

மேலும் போலீசார் அவரிடம் விசாரித்ததில், கடந்த மாதம் 27-ந் தேதி பட்டாபிராம் சார்லஸ் நகர், வ.உ.சி. தெருவை சேர்ந்த ராணி (66) என்ற மூதாட்டியிடமும், ஜார்ஜ் மோட்டார் சைக்கிளில் வந்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். சென்னை எம்.எம்.டி.ஏ. பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று நடந்து செல்லும் பெண்களிடம் அடிக்கடி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் ஜார்ஜை கைது செய்தனர். ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு ராயலா நகர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மீது நீலாங்கரை, மாங்காடு, ராயலா நகர், வளசரவாக்கம், புழல், ஆதம்பாக்கம், உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் சங்கிலி பறிப்பு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் ஜார்ஜை நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்