கர்நாடகத்தில் 63 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது

கர்நாடகத்தில் 63 நகர உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

Update: 2019-05-08 22:00 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் 63 நகர உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

29-ந் தேதி தேர்தல்

கர்நாடகத்தில் முதல் கட்டமாக 109 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 2-வது கட்டமாக நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பதவி காலம் நிறைவடையும் 103 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். இதில் 39 நகர உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக கர்நாடக அரசின் வார்டு மறுசீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குந்துகோல் சட்டசபை தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி இடைத்ேதர்தல் நடப்பதால், அந்த தொகுதியில் உள்ள பட்டண பஞ்சாயத்துகள் தவிர மீதமுள்ள 63 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

இந்த நிலையில், 63 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 29-ந் தேதி தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர்கள் பிறப்பிக்க உள்ளனர். இதனால் அந்த 63 நரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 16-ந் தேதி கடைசி நாளாகும். 17-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. மனுக்களை வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த 63 நகர உள்ளாட்சி அமைப்புகளில் 8 நகரசபைகள் 33 புரசபைகள், 22 பட்டண பஞ்சாயத்துகள் உள்ளன. ஒட்டு மொத்தமாக 1,361 வார்டுகள் இருக்கின்றன. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குவதால், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்