பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 96.63 சதவீதம் பேர் தேர்ச்சி மாநில அளவில் 13-வது இடம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வை எழுதிய 96.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாநில அளவிலான தேர்ச்சி தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் 13-வது இடத்தை பெற்றுள்ளது.

Update: 2019-05-08 22:45 GMT
பெரம்பலூர், 

தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்புக்கு கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2018-19-ம் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின் படி பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் படி பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வை 3 ஆயிரத்து 805 மாணவர்களும், 4 ஆயிரத்து 8 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 813 பேர் எழுதினர். இதில் 3 ஆயிரத்து 656 மாணவர்களும், 3 ஆயிரத்து 894 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 550 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 96.63 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் 96.08 சதவீதமும், மாணவிகள் 97.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவு பற்றிய பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. அதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு தங்களுடைய மதிப்பெண்கள் என்ன? என்பதை குறித்து கொண்டனர். பலர் வீடுகளில் இருந்தே தங்களுடைய செல்போன் மூலம் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர். பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவு வந்தது. இதில் அவர்களது பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் அனுப்பப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 73 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 21 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் ரஞ்சன்குடி அரசு மேல்நிலைபள்ளி, நெற்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி, கிழுமத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியும், 7 சுயநிதிப்பள்ளிகளும், 10 மெட்ரிக் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு முடிவில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் கடந்த கல்வி ஆண்டில் 12-வது இடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டு 3-வது இடத்துக்கும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவில் கடந்த ஆண்டு பெற்ற 10-வது இடத்தில் இருந்து, இந்த ஆண்டு 8-வது இடத்துக்கும் முன்னேறியது. ஆனால் கடந்த ஆண்டு பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் 11-வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது மாநில அளவில் 2 இடம் பின்னடைந்து பெரம்பலூர் மாவட்டம் 13-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கணினி அறிவியல், வணிகவியல் ஆகிய பாடங்களில் தலா ஒருவரும், கணினி செயல்பாடு பாடத்தில் மொத்தம் 4 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளில் கண் பார்வை குறைபாடுடையவர்கள் 5 பேரும், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 5 பேரும், இதர வகை மாற்றுத்திறனாளிகள் 3 பேரும் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் 19 பேர் தேர்வு எழுதியதில் 18 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மேலும் செய்திகள்