துறையூர், மண்ணச்சநல்லூர், சோமரசம்பேட்டை பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை மேற்கூரை சரிந்து விழுந்ததில் பெண் பலி

துறையூர், மண்ணச்ச நல்லூர், சோமரசம்பேட்டை பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மேற்கூரை சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2019-05-08 22:15 GMT
துறையூர்,

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி, தேரப்பம்பட்டி கிழக்கு கொட்டம், வடக்கு கொட்டம், கல்லுக்குழி மற்றும் புலிவலம், மண்பறை, டி.புதுப்பட்டி, பெரமங்கலம் ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் பொன்னுசங்கம்பட்டியை சேர்ந்த லோகநாதன், சுந்தரம், அரியான், கணேசன், பழனியாண்டி, சவுந்தர்ராஜன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களின் வீட்டின் மேற்கூரைகள் பறந்தன.

மேலும், மண்பறை மற்றும் பொன்னுசங்கம்பட்டியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், சாலையோரம் உள்ள 2 மரங்கள் சாய்ந்தன. மாடுகளுக்கு தீவனமாக வைத்திருந்த வைக்கோல் போர் மற்றும் சோளத்தட்டைகளும் பறந்தன. மழைக்கு ஆடு ஒன்றும் பலியானது. ரூ.25 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


பாதிக்கப்பட்ட கிராமங்களை துறையூர் வருவாய் தாசில்தார் பிரகாஷ், கண்ணனூர் வருவாய் ஆய்வாளர் ஜெசிமேரி, கிராம நிர்வாக அலுவலர் ரெங்கராஜன் ஆகியோர் பார்வையிட்டு சேத விவரங்களை மதிப்பிட்டனர்.

இதேபோல, சோமரசம்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் சில பகுதிகளில் மழை பெய்தது. அப்போது பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அல்லித்துறை சரவணபுரம் பகுதியில் வசித்து வரும் ஒருவரின் வீட்டின் மாடியில் போடப்பட்டிருந்த மேற்கூரை தூக்கி எறியப்பட்டது. அந்த மேற்கூரை அருகில் இருந்த மின் வயரில் விழுந்ததில் 3 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

போசம்பட்டி மேலக்காடு பகுதியில் சூறாவளி காற்றால் எட்டரை-போதாவூர் மெயின் சாலையில் இருந்த மரம் ஒன்று அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்களை கொண்டு சென்ற சரக்கு வாகனம் மீது விழுந்தது. இதில், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இனாம்புலியூர் பகுதியில் மரம் விழுந்ததில் 4 மின்கம்பங்கள் சாய்ந்தன.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் வேட்டைக்காரன் பண்ணை பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 29). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (35). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் திடீரென்று வீசிய சூறைக்காற்றில் வீட்டின் மேல் போடப்பட்டிருந்த மேற்கூரை(ஆஸ்பெட்டாஸ்) சரிந்து விழுந்ததில் மல்லிகா பலத்த காய மடைந்தார். அவரை மீட்டு, மண்ணச்சநல்லூர் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்