பழனி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

பழனி பஸ்நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டது.

Update: 2019-05-09 22:30 GMT
பழனி,

ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் திகழும் பழனிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் பழனி பஸ்நிலையம், அடிவாரம் ஆகிய பகுதிகள் எப்போதும் பரபரப்பாகவே காணப் படும்.

இந்நிலையில் பஸ்நிலைய பகுதி, சன்னதி வீதி, பாதவிநாயகர் கோவில், அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்கள், நடைபாதைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் வைத்திருந்தனர். இதனால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் பழனி நகரில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நகராட்சி ஆணையர் நாராயணன், பழனி தாசில்தார் பழனிச்சாமி மற்றும் பணியாளர்கள் நேற்று அதிரடியாக பழனி நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்தவகையில் பஸ்நிலையம், சன்னதிவீதி, தேவர் சிலை பகுதி, அடி வாரம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடையின் முன் முகப்புகள், தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றை லாரிகளில் ஏற்றி சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதை கண்டதும் ஒரு சில கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றினர். இனி வரும் காலங்களில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடை, வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் எராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்