பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் உயர்த்த முயற்சி மேற்கொண்ட ஆசிரியர்கள், மாணவர்களை கலெக்டர் கந்தசாமி பாராட்டினார்.

Update: 2019-05-11 22:45 GMT
திருவண்ணாமலை,

மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகளில் பல ஆண்டுகளாக கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் படிப்படியாக முன்னேறி வருகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டு மாநில அளவில் 22-வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டு 20-வது இடத்தை பிடித்துள்ளது. இது சென்ற ஆண்டை காட்டிலும் 0.83 சதவீதம் உயர்வாகும். அதேபோல பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.62 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 30-வது இடத்தில் இருந்து 24-வது இடத்தை பிடித்துள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 8.47 சதவீதம் உயர்வாகும். பிளஸ்-2 பொதுத் தேர்வில் 88.03 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 27-வது இடம் பிடித்து உள்ளது. இது சென்ற ஆண்டை காட்டிலும் 0.06 சதவீதம் உயர்வாகும்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து சிறப்பு கவனம் செலுத்தி அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்துதல், கற்றல்திறன் குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சிகள் அளித்தல் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி மாணவர்களின் பெற்றோர்களுக்கு உரிய வழிகாட்டுதல் போன்ற தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை காட்டிலும் உயர்த்துவதற்கு ஏதுவாக அமைந்தது.

அரசு பள்ளிகள் மட்டுமின்றி ஆதிதிராவிடர், வனத்துறை, பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளிலும் பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து உள்ளது.

மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் அனைத்திலும் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள் அனைத்திலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கேந்திர வித்யாலயா பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் அனைத்திலும் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி சதவீதம் உயர்த்தி கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கு பெரு முயற்சிகள் மேற்கொண்ட தலைமை ஆசிரியர்களுக்கும், தொய்வின்றி பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்