மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இன்று வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது.

Update: 2019-05-12 22:30 GMT
மணப்பாறை,

மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடு, மண்டகப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய விழாவான பால்குட விழா நேற்று காலை நடைபெற்றது. முதலில் கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் மேளதாளம் முழங்க அந்த கோவிலில் இருந்து நாட்டாண்மை வீராசாமி குடும்பத்தினர் பால்குடம் எடுத்து முதலில் வர கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்தும் பலர் வந்தனர். ராஜவீதிகளின் இரு ஓரங்களிலும் மக்கள் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி வணங்கினர். அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல்களில் பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர், உணவு பொட்டலங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மணப்பாறை தரகு வர்த்தக சங்கம், பெருந்தலைவர் காமராஜர் காய்கனி மார்க்கெட், அறிஞர் அண்ணா காய்கனி மார்க்கெட் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு உணவு வழங்கினர்.

இன்று வேடபரி

பால்குட ஊர்வலம் ராஜவீதிகளின் வழியாக வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்த பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பால்குட விழாவை தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பொங்கல் விழா, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும், மாலையில் அம்மன் குதிரை வாகனத்தில் செல்லும் வேடபரி நிகழ்ச்சியும், பின்னர் முளைப்பாரியும் நடைபெறுகிறது.

பக்தர்கள் வசதிக்கான தண்ணீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை மணப்பாறை நகராட்சி ஆணையர் தலைமையில் நகராட்சி அலுவலர்களும், பணியாளர்களும் செய்திருந்தனர். மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சர்மு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ். வீரமணி, கோவில் செயல் அலுவலர் பிரபாகர் ஆகியோர் தலைமையில் செய்துள்ளனர். இதேபோல் தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் பேரவை சார்பில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்