வேடசந்தூர் அருகே கிராமங்களில் தினமும் இரவு 2 மணி நேரம் மின்தடை திருட்டு பயத்தால் பொதுமக்கள் தவிப்பு

வேடசந்தூர் அருகேயுள்ள கிராமங்களில் தினமும் இரவு 2 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதால், திருட்டு பயத்தால் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

Update: 2019-05-12 22:30 GMT

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகேயுள்ள விருதலைபட்டி, ரெங்கநாதபுரம், கல்வார்பட்டி மற்றும் எரியோடு சுற்றுவட்டார கிராமங்களில் தினமும் இரவு மின்தடை செய்யப்படுகிறது. இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தினமும் 2 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்தடை செய்யப்படுகிறது.

இங்குள்ள கிராம மக்கள் பெரும்பாலும் பகலில் கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். இரவு தூக்கம் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வு ஆகும். ஏற்கனவே பகலில் வெயில் கொளுத்துவதால், இரவிலும் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதற்கிடையே இரவு மின்தடை செய்யப்படுவதால், மின்விசிறியை இயக்க முடியாமல் நள்ளிரவு வரை தூங்காமல் மக்கள் தவிக்கின்றனர்.

ஏற்கனவே கிராமங்களில் ஆடு, கோழிகளை திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. சிலநேரம் பூட்டிய வீடுகளிலும் கொள்ளை நடக்கிறது. இதற்கிடையே மின்தடையால் தெருவிளக்குகள் எரியாமல், பல கிராமங்கள் இருளில் மூழ்கி விடுகின்றன. இது திருடர்களுக்கு மிகவும் வசதியாகி விடுகிறது. அதை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி விடுவார்களோ, என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது.

இதனால் இரவு மின்தடை நேரத்தில் மக்கள் தூக்கமின்றி சிரமப்படுவதோடு, திருட்டு பயத்தாலும் தவிக்கின்றனர். கிராம மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் இரவுநேர மின்தடையை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்