2–வது நாளாக கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் 15 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 15 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Update: 2019-05-12 22:30 GMT

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்தநிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதில் பலர் அறைகள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் வாகனங்களிலேயே சுற்றுலா பார்த்து விட்டு திரும்பினர்.

இதற்கிடையே நேற்றும் 2–வது நாளாக அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் வத்தலக்குண்டு–கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள பெருமாள்மலை முதல் சுற்றுலா இடங்கள் வரை சுமார் 15 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் நேரடி பார்வையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் பல்வேறு இடங்களிலும், சுற்றுலா இடங்களிலும் குவிக்கப்பட்டு போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்தினர்.

இருந்தபோதிலும் வாகனங்கள் அதிகளவில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனிடையே காலை முதலே அதிக வெப்பம் நிலவிய நிலையில் பகல் 12 மணி முதல் மேக மூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழ்நிலை நிலவியது.

இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதல் வாகன நிறுத்தும் இடங்கள் உருவாக்க வேண்டும். இதற்காக மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், நகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடத்தையும் தேர்வு செய்து அங்கு தற்காலிகமாக வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுற்றுலா பயணிகளின் அதிக வருகை காரணமாக பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள ஆயிரக்கணக்கான மலர்களை காண கூட்டம் அலைமோதியது. அத்துடன் படகு சவாரியிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நகர் பகுதி களை கட்டியுள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்