மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்; டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்தடையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று டாக்டர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-05-12 22:45 GMT

சிவகாசி,

சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது:–

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்தடை காரணமாக 5 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையின் டீன், மின்தடையால் நோயாளிகளின் மரணம் நிகழவில்லை என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள வெண்டிலேட்டர்கள் சரியான முறையில் செயல்படவில்லை என்றும் அதனால் தான் மரணம் எழுந்ததாக குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து நேர்மையான விசாரணையை தமிழக அரசு நடத்த வேண்டும்.

உயிரிழந்த 5 நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அரசு ராஜாஜி மருத்துவமனையில் 17 புதிய யூ.பி.எஸ். கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதை சரியான நேரத்தில் பொருத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் 8 ஜெனரேட்டர்கள் உள்ளன. ஆனால் அவை இயங்காமல், பழுது ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை சரி செய்ய போதிய தொழில்நுட்ப நிபுணர் இல்லாததால், முறையாக பராமரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடு தெளிவாக தெரிகிறது. இதில் நேர்மையான விசாரணைக்கு உத்தர விட வேண்டும். சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் பாதிப்பு ரத்தத்தை செலுத்திய சம்பவம் நடந்து இருக்கிறது. சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி சிறப்பாக செயல்படாதது தான் இதற்கு காரணம்.

அதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற அரசு மருத்துவமனைகளில் கெட்டு போன ரத்தம் செலுத்தப்பட்ட 15 கர்ப்பிணிகள் இறந்ததாக கூறப்படுகிறது. நேர்மையான அதிகாரிகளை கொண்டு விசாரணை குழு அமைக்க வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் மருந்துகளும், வலி நிவாரணிகள், கிருமி கொல்லி மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் அரசு ஆஸ்பத்திரிகள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றன. அரசு ஆஸ்பத்திரிகளில் சூரிய சக்தியை பயன்படுத்தி எந்திரங்களை இயக்ககூடிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கூட மின்வெட்டு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்