கேலி செய்ததை கண்டித்ததால் தீர்த்து கட்டினேன் முதியவர் கொலையில் கைதானவர் வாக்குமூலம்

கேலி செய்ததை கண்டித்ததால் தீர்த்து கட்டினேன் என்று முதியவர் கொலையில் கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-05-13 23:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே புதுக்கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 70), தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மதன் என்ற மாணிக்க குமார்(31). இவர், மாணிக்கத்தை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்தார். இதனால், அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மாணிக்கம் தெருவில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மதன் வந்து கொண்டிருந்தார். அவர், மாணிக்கத்தை மீண்டும் கேலி, கிண்டல் செய்தார். அதை மாணிக்கம் கண்டித்ததால், அவர்களுக்குள் தகராறு நடந்தது. அப்போது ஆத்திரமடைந்த மதன், தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் மாணிக்கத்தை சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே, அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, வெளியூர் தப்பி செல்ல தேரூர் பஸ்நிலையத்தில் காத்திருந்த மதனை கைது செய்தனர்.

கைதான மதன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

எனது வீட்டின் அருகே தான் மாணிக்கம் வசித்து வந்தார். அவரை நான் அடிக்கடி கேலி, கிண்டல் செய்வேன். அவர், என்னை கண்டித்தார். ஆனால், நான் மீண்டும்... மீண்டும் அவரை கிண்டல் செய்து வந்தேன்.

நேற்று முன்தினமும் அதேபோல் மாணிக்கத்தை கிண்டல் செய்தேன். உடனே, அவர் என்னை தகாத வார்த்தையால் பேசினார். இதில் ஆத்திரமடைந்த நான் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றேன். வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்