கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகிப்பதை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகிப்பதை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-13 22:30 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் 15-வது வார்டு கஸ்பா பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாக தெரிகிறது. மேலும் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார் பழுதடைந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள், பழுதான மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்காமல் புகார் தெரிவித்த மக்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை விருத்தாசலம்-கடலூர் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலி குடங்கள் மற்றும் கழிவுநீர் கலந்த குடிநீரை குடங்களில் பிடித்து வந்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதனை குடிப்பதால் எங்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் பரவும் நிலை உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பாண்டு கூறுகையில், பொதுமக்களின் புகாரை தொடர்ந்து மின்மோட்டார் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களுக்குள் இப்பிரச்சினை சரிசெய்யப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதுவரை வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார். 

மேலும் செய்திகள்