ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11¼ லட்சம் மோசடி ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது புகார்

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11¼ லட்சம் மோசடி ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது புகார் மனு அளிக்கப்பட்டது.

Update: 2019-05-13 22:00 GMT

வேலூர், 

காட்பாடி தாலுகா தேன்பள்ளி கிராமத்தை சேர்ந்த மணி, வாசுதேவன் உள்பட 6 பேர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். இங்கு அவர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்களது மகன்கள் கடந்த 2016–ம் ஆண்டு ராணுவத்தில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவலம் அருகேயுள்ள ஸ்ரீபாதநல்லூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களான அண்ணன், தம்பி எங்களிடம் ராணுவத்தில் (ஆபிசர் கோட்டாவில்) வேலை வாங்கி தருவதாகவும், தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரின் மூலம் எளிதில் அங்கு வேலை கிடைத்து விடும். அதற்கு ஒருவருக்கு ரூ.2½ லட்சம் செலவாகும் என்றனர்.

அதனை உண்மை என நம்பிய நாங்கள் பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, சில மாதங்களில் வேலை வாங்கி தருவதாக ராணுவத்தில் பணிபுரிந்து வருபவர் கூறினார். 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை வேலை வாங்கி தராமல், நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் 3 பேரும் சேர்ந்து மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்