பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட 800 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட 800 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-13 22:45 GMT
பொள்ளாச்சி,

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தட்டுகள், பைகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவை தொடர்ந்து பெரும்பாலான உணவகங்கள், இறைச்சி கடைகளில் வாழை இலை பயன்படுத்த தொடங்கி விட்டனர். மளிகை கடைகளில் பேப்பர் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வந்ததால் அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகள் தொடர்பாக ஆய்வுக்கு செல்லவில்லை.இதன் காரணமாக பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு மற்றும் விற்பனை அதிகரித்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் மாணிக்கவேல்ராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், சீனிவாசன், விஜய் ஆனந்த் மற்றும் சுகாதார பணியாளர்கள் கடைகளில் நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் உள்பட 14 வகையான பொருட்கள் பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடை உத்தரவு அமலுக்கு வந்த போது, பெரும்பாலானோர் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர். தற்போது கடைகள், உணவகங்கள், ரோட்டோர தள்ளுவண்டி கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக புகார் வருகிறது.

எனவே வியாபாரிகள், பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இன்று (நேற்று) நடத்தப்பட்ட சோதனையில் பிளாஸ்டிக் பைகள் மொத்த வியாபார கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 800 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக ரூ.20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கடைகள், உணவகங்களில் சோதனை நடத்தப்படும். பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தாலும் அபராதம் வசூலிக்கப்படும். பிளாஸ்டிக் பைகள் இல்லாத நகராட்சியாக மாற்ற பொதுமக்கள், வியாபாரிகள் முழுஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்