8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற, விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

அரக்கோணம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2019-05-14 23:15 GMT
வேலூர், 

வாலாஜா பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் அரக்கோணம் அருகே உள்ள பெருமாள் ராஜபேட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தாள். 11.5.2014 அன்று காலை 11 மணிக்கு அங்குள்ள கோவில் அருகே மற்ற சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென காணாமல் போய் விட்டாள்.

பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மறுநாள் திருத்தணி ரோட்டில் உள்ள ஒரு கிணற்றில் சிறுமி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர். அப்போது சிறுமியின் காது அறுக்கப்பட்டு, அவள் அணிந்திருந்த கம்மல் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி கார்த்தி என்ற கார்த்திகேயன் (வயது 44) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அறிந்த அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, கார்த்திகேயன் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக்கூறி தனது மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துவிட்டு திருத்தணி ரோட்டில் உள்ள ஒரு மறைவான பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டார். சிறிது நேரத்தில் சிறுமி மயங்கிவிட்டாள். உடனே அவளது காதை அறுத்த கார்த்திகேயன், கம்மலை பறித்துக்கொண்டார்.

பின்னர் சிறுமி இறந்து விட்டதை அறிந்த அவர் அங்குள்ள ஒரு கிணற்றில் உடலை போட்டுவிட்டு இரவில் வீட்டுக்கு வந்துவிட்டதாகவும், நகையை அடகு வைத்துவிட்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி செல்வம் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜரானார். நேற்று இந்த வழக்கில் நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியை கொலை செய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதமும், ‘போக்சோ’ சட்டத்தில் ஒரு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பில் கூறியிருந்தார்.

மேலும் சிறுமியை கடத்தி சென்றதற்கு 7 ஆண்டுகள், நகையை பறித்ததற்கு 7 ஆண்டுகள், மற்றும் திட்டமிட்டு தவறு செய்ததற்கு 3 ஆண்டு என 17 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

இதில் அபராதம் விதிக்கப்பட்ட ரூ.9 ஆயிரத்தை கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த தொகை போதுமானதாக இல்லாததால் இறந்த சிறுமியின் பெற்றோருக்கு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின்கீழ் ரூ.5லட்சம் இழப்பீடாக வழங்க வேலூர் மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்