திருக்கோவிலூர் அருகே, குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

திருக்கோவிலூர் அருகே குடிநீர் வசதி கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-14 22:30 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த முத்துராமன் என்பவர் தலைமையில் பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் திருக்கோவிலூர்-வேட்டவலம் சாலையில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, மோட்டார் பழுதடைந்ததன் காரணமாக கடந்த 5 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஏழைகளான நாங்கள் ஊராட்சி நிர்வாகம் வினியோகம் செய்யும் குடிநீரை நம்பித்தான் இருக்கிறோம். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் தண்ணீரின் தேவை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.

மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் ஆனந்தன், முகையூர் வட்டார வளர்ச்சி அதிகாரி காமராஜ், அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நாளை(இன்று) பழுதடைந்த மோட்டாருக்கு பதிலாக புதிய மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவத்தால் வீரபாண்டி கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்