சாலையை கடந்த போது டேங்கர் லாரி மோதி கேரம் வீராங்கனை பலி 68 பதக்கங்களை வென்றவர்

டோம்பிவிலியில் சாலையை கடந்த போது கேரம் வீராங்கனை டேங்கர் லாரி மோதி பலியானார். அவர் கேரம் போட்டிகளில் 68 பதக்கங்களை வென்றவர் ஆவார்.

Update: 2019-05-14 22:26 GMT
மும்பை,

தானே மாவட்டம் டோம்பிவிலி பல்லவா சிட்டி பகுதியை சேர்ந்த கேரம் வீராங்கனை ஜானவி மோரே (வயது18). மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த கேரம் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று 68 பதக்கங்களை வாங்கி குவித்தவர். இதில் 36 தங்க பதக்கங்கள் ஆகும்.

இந்தநிலையில், சம்பவத்தன்று மாலை ஜானவி மோரே தனது வீட்டுக்கு எதிரே உள்ள சாலையை கடந்து கொண்டு இருந்தார்.

டேங்கர் லாரி மோதி சாவு

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று ஜானவி மோரே மீது பயங்கரமாக மோதியது. இதில், அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானவி மோரே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த மான்பாடா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜானவி மோரேயின் சாவுக்கு அந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

போலீஸ் விசாரணை

பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்த நேரத்தில் வாகனங்களை அந்த வழியாக செல்ல அந்த போலீஸ்காரர் அனுமதித்ததாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி டிரைவர் ரோகிதாஸ் பாடுலே என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலை விபத்தில் கேரம் வீராங்கனை உயிரிழந்த சம்பவம் டோம்பிவிலியில் சோகத்தை ஏற்படுத்தியது.

டோம்பிவிலியில் நடந்த ஜானவி மோரேயின் இறுதிச்சடங்கில் மும்பை, தானே, நவிமும்பை பகுதிகளை சேர்ந்த ஏராளமான கேரம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்