கட்டுமானப் பணிக்கு மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி; ஆய்வுக்குப்பின் விற்க நடவடிக்கை

புதுவை மாநில கட்டுமானப் பணிக்கு மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்குப்பின் இதை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2019-05-14 23:00 GMT
காரைக்கால்,

புதுவை மாநிலத்தில் கட்டுமானப் பணிக்கு பயன்படும் ஆற்றுமணல் குவாரிகள் இல்லை. இதனால் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிக்கு தேவையான மணல் பக்கத்து மாநிலமான தமிழகத்தில் இருந்தே வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆற்று மணலை வெளிநாட்டில் இருந்து காரைக்கால் தனியார் துறைமுகம் மூலம் இறக்குமதி செய்ய, புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி, கடந்த 12-ந் தேதி மலேசியாவில் இருந்து அதாஷ் என்ற கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு சுமார் 50 ஆயிரம் டன் ஆற்றுமணல் வந்தது. இது துறைமுக வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மணலை மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, துணை கலெக்டர் ஆதர்ஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பக்கிரிசாமி ஆகியோர் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து நிருபர்களிடம் கலெக்டர் கூறுகையில், ‘புதுச்சேரி அரசின் ஒப்புதல்படி, சுமார் 50 ஆயிரம் டன் ஆற்று மணல் காரைக்கால் மார்க் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்ய தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, கப்பல் மூலம் மார்க் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மணலை மாவட்ட பொதுப்பணித்துறை ஆய்வு செய்து வருகிறது. ஆய்வறிக்கை வந்தவுடன் சட்ட விதிகளின்படி மணல் விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்