மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை - சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2019-05-14 23:45 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் அரியாம்பட்டி அருகே உள்ள செலவடை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் ராம்குமார் (வயது 27). தொழிலாளி. கடந்த 9.2.2016 அன்று, அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் பால் வாங்க சென்று உள்ளார்.

அப்போது அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை வெளியூருக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து மாணவியின் தாய் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 15.2.2016 அன்று செலவடை பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த ராம்குமாரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். பின்னர் ராம்குமாரை சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதனிடையே விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி ராம்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி முருகானந்தம் தீர்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் ராம்குமாரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காந்திமதி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்