பரவசமூட்டும் பழவேற்காடு படகு சவாரி

தமிழக தலைநகர் சென்னையில் பல முக்கியமான சுற்றுலா பகுதிகள் உள்ளன.

Update: 2019-05-15 07:23 GMT
இங்கேயே பல ஆண்டுகளாக இருப்பவர்கள் கூட இப்பகுதிகளுக்கு சென்றிருப்பார்களா என்பது சந்தேகம். அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகளை கவரும் பகுதியாக உள்ளது பழவேற்காடு ஏரி. இதை புலிகாட் ஏரி என்றும் அழைக்கின்றனர். தெற்காசியாவிலேயே கடல் தண்ணீர் அதிக அளவில் நிரம்பியுள்ள ஏரியாக இது காட்சிஅளிக்கிறது.

ஒடிசாவில் உள்ள சிலிக்கா ஏரிக்கு அடுத்தபடியாக உப்புத்தண்ணீர் ஏரியாக இது விளங்குகிறது. ஏறக்குறைய 600 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இது பரவியுள்ளது. போர்ச்சுக்கீசிய காலத்தில் இது துறைமுகமாகவும், டச்சு மற்றும் பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்திலும் இது துறைமுகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அரிய வகை பறவைகளின் சரணாலயமாக இது திகழ்கிறது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் வெளிநாட்டிலிருந்து பலவகை பறவையினங்கள் இப்பகுதிக்கு வருவதுண்டு. இவற்றில் பிளமிங்கோ மிக முக்கியமான பறவையினமாகும். கிங்பிஷர் எனப்படும் மீன் கொத்தி, ஸ்டார்க் வகை பறவைகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது.

இயற்கை வளங்களை ரசிப்போருக்கு இது மிகவும் ரம்மியமான சுற்றுலா பகுதியாகும். இந்த ஏரியில் பல வகையான மீன் இனங்கள் உள்ளன. வெள்ளை இறா, டைகர் இறா, கேட்பிஷ், பச்சை நண்டு போன்ற அரியவகை கடல் இனங்களும் இங்கு கிடைக்கும்.

சென்னையிலிருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பழவேற்காடு பகுதியானது திருவள்ளூர் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. பொன்னேரி தாலுகாவில் அமைந்துள்ள இப்பகுதிக்கு மாதத்துக்கு ஒரு லட்சம் பயணிகள் வருகின்றனர். கோடைக் காலங்களில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கிறது. உள்ளூரிலேயே சுற்றுலா மேற்கொள்வோர் அதாவது சென்னைவாசிகள் பழவேற்காடு ஏரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். அதிகம் செலவு பிடிக்காத சுற்றுலா பகுதியாகவும் இது இருக்கும். பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் இப்பகுதி அமைந்துள்ளது. ரெயில் நிலையத்திலிருந்து பேருந்து வசதியும் உண்டு.

பழவேற்காடு ஏரியை ஒட்டி அமைந்துள்ள கடல் பகுதியும் ரம்மியமானது. இப்பகுதியில் டச்சு கல்லறை, கோட்டை, தேவாலயங்கள், லைட் ஹவுஸ் ஆகியனவும் பார்க்க வேண்டிய பகுதிகளாகும். இங்குள்ள கடல் பகுதியானது புதுச்சேரி பாரடைஸ் பீச் போல மிகவும் சுத்தமாக அழகாக உள்ளது.

மேலும் செய்திகள்