கோவையில், கோர்ட்டுக்கு வெளியே 2 வாலிபர்களை வெட்டிய 4 பேர் கைது

கோவையில் கோர்ட்டுக்கு வெளியே 2 வாலிபர்களை வெட்டி சாய்த்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ‘எங்களை கொலை செய்ய திட்டமிட்டதால், முந்திக்கொண்டு தீர்த்துக்கட்ட முயன்றோம்’ என்று கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2019-05-15 23:00 GMT
கோவை,

கோவை கணபதி அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் பிரதீப் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள கார் ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கத்தி குத்து வழக்கில் நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இதற்காக அவர் தினசரி காலையில் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தார். வழக் கம் போல நேற்று முன்தினம் காலை பிரதீப் கையெழுத்து போடுவதற்காக தனது நண்பர் தமிழ்வாணன் (21) என்பவருடன் ஸ்கூட்டரில் வந்தார்.

கையெழுத்து போட்ட பின்னர் ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்ட பிரதீப் மற்றும் தமிழ்வாணனை 4 பேர் சுற்றி வளைத்து கோர்ட்டுக்கு வெளி யே சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பிச் சென்றனர். இதில் நிலை குலைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் கிடந்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து வெட்டு காயங் களுடன் கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நடுரோட்டில் பட்டப்பகலில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய, போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில், போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், உதவி கமிஷனர் எழில் அரசு மேற்பார்வையில் ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, சப்- இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. முதற்கட்ட விசாரணையில், வாலிபர்களை வெட்டியது கோவை கணபதி திலகர் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (25), 2-வது வீதியை சேர்ந்த ஹரிஹரன்(25), எல்லை தோட்டத்தை சேர்ந்த தனபால் (24), மூர்மார்க்கெட்டை சேர்ந்த சூர்யா (24) என்பதும், அவர்களுக்கு பின்னணியில் சிலர் சேர்ந்து இந்த பயங்கர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தப்பியோடிய 4 பேரையும் கோவை ஆம்னி பஸ் நிலையம் அருகே நேற்று கைது செய்தனர். கை தான 4 பேர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

கோவை சங்கனூரை சேர்ந்த எங்களுடைய நண்பர் சந்தோஷ்குமார் (25) என்பவரை பிரதீப், அவருடைய நண்பர்களான பிரசாந்த், ராஜேஷ் ஆகியோர் சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்திக்கொல்ல முயன்றனர். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் 3 பேரையும் சரவணம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பிரதீப்புக்கு கடந்த மாதம் 29-ந்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்பேரில் அவர் தினசரி காலையில் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேர் சிறையில் உள்ளனர். ஜாமீனில் வெளியே இருந்த பிரதீப் எங்களை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் நாங்கள் அவரை கொல்ல முந்திக்கொண்டோம். அவரை கொல்ல முடிவு செய்து எங்கு எப்போது சென்று வருகிறார் என்பதை தொடர்ந்து கண்காணித்தோம்.

ஏற்கனவே ஒருமுறை கணபதி மூர்மார்க்கெட் பகுதியில் வைத்து பிரதீப்பை கொல்ல திட்டமிட்டு சுற்றி வளைக்க முயன்றோம். அப்போது அவர் தப்பிவிட்டார். எனவே கோர்ட்டில் கையெழுத்திட்டுவிட்டு வரும் பாதையை ஏற்கனவே நோட்டமிட்டு காத்திருந்தோம். சம்பவத்தன்று அவர், கோர்ட்டில் கையெழுத்திட்டுவிட்டு தமிழ்வாணனுடன் வெளியே வந்ததை நோட்டமிட்டோம்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்து அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது தயாராக இருந்த நாங்கள் 2 பேரையும் வழிமறித்து சரமாரியாக வெட்டினோம். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

இந்த கொலை முயற்சியில் தொடர்புடைய ஹரிஹரன் என்கிற திருட்டு கொசு, ராஜேஷ், சுருட்டை மணி உள்பட மேலும் 5 பேர் 3 மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்து இருந்தனர். இதனை தொ டர்ந்து அவர்கள் 5 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். கொலை முயற்சிக்கு பயன்படுத்திய 5 அரிவாள்கள், 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் நேற்று கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 4 பேரையும் வருகிற 29-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்