ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2019-05-15 23:30 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் சீலான் (வயது 28). எலக்ட்ரீசியன். இவர் தனது தாய் சாவித்திரி (48), தங்கை ஜீவா (26), தங்கையின் மகன் மோனீஸ்குமார் (6) ஆகியோருடன் ஒரு புகார் மனு கொடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவர்கள் அலுவலகத்துக்கு முன்பு நின்றிருந்தபோது மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை திடீரென வெளியே எடுத்தனர். அதில் ஒருவர் தன் உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு மற்ற 3 பேர் மீதும் ஊற்றினார். 4 பேர் தீக்குளிக்க முயன்றதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், விரைந்து சென்று அவர்களிடம் இருந்த தீப்பெட்டியையும், மண்எண்ணெய் பாட்டிலையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கிருந்த தண்ணீரை எடுத்து வந்து அவர்கள் மீது ஊற்றினார்கள்.

அதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்குள் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு:–

சீலானுக்கு நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான். கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதைத்தொடர்ந்து சீலான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பெண்ணை 2–வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் முதல் மனைவி தனது மகனுடன் சீலானின் வீட்டில் குடியேறினார். இதனால் தனது வீட்டை முதல் மனைவி அபகரித்துவிட்டதாக பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் சீலான் புகார் கொடுத்து உள்ளார். ஆனால் அங்கு உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் மனு கொடுக்க அவர் குடும்பத்துடன் வந்தார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் விசாரணை நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்