கோவை அருகே சூறாவளி காற்று, மரம் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப சாவு

கோவை அருகே வீசிய சூறாவளி காற்று காரணமாக மரம் விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-15 22:30 GMT
கோவை,

கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரம் நின்ற சில மரங்கள் சாய்ந்தன. சாலை தடுப்பான்கள் காற்றில் இழுத்து செல்லப்பட்டன. போலீசார் நிழலுக்க ஒதுங்கி நிற்க அமைக்கப்பட்ட நிழற்குடைகளும் சாய்ந்தன. அதுபோன்று கோவையில் உள்ள அவினாசி ரோடு மேம்பாலத்தின் அடிப்பகுதி, வடகோவை மேம்பால அடிப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.

கோவை அருகே உள்ள நவக்கரை பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). இவர் க.க.சாவடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சாலையோரத்தில் நின்றிருந்த மரம் ஒன்று திடீரென்று முறிந்து கீழே சாய்ந்தது.

இந்த மரத்தின் அடியில் சூர்யா சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்